• தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு வரவேற்கிறோம்
  • 044 22353134
  • Font Size: A A A
logo

Tamil Nadu Pollution Control Board
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

நீர் தர கண்காணிப்பு

இந்திய தேசிய நீர்வள ஆதாரங்கள் கண்காணிப்பு திட்டம் மற்றும் புவி சுற்றுப்புறச் சூழல் கண்காணிப்பு திட்டம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உள்நாட்டின் நீரின் தன்மையை 2 பெரிய திட்டங்கள் மூலம் அதாவது 1984-ஆம் ஆண்டிலிருந்து புவி சுற்றுபுறச்சூழல் கண்காணிப்பு திட்டம் (ஜெம்ஸ்) மூலமும், 1988 ஆம் ஆண்டிலிருந்து இந்திய தேசிய நீர்வள ஆதாரங்கள் கண்காணிப்பு திட்டம் (மினார்ஸ்) மூலமும் கண்காணிக்கிறது. இவற்றின் கீழ் காவிரி, தாமிரபரணி, பாலாறு மற்றும் வைகை போன்ற 4 முக்கிய ஆறுகளில் 32 நிலையங்கள் மூலமும், உதகமண்டலம், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு ஆகிய 3 ஏரிகளின் நீரின் தன்மையும் தமிழ்நாட்டில் கண்காணிக்கப்பட்டு வந்தன. பின்னர், நவம்பர் 2010 முதல் 11-வது திட்டத்தின் கீழ் மேலும் 23 இடங்களில் நீரின் தன்மையைக் கண்காணிக்க மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் ஒப்புதல் அளித்து நிதி உதவி வழங்கி வருகிறது. தற்பொழுது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் 55 இடங்களில் நீரின் தன்மை கண்காணிக்கப்படுகிறது. இந்த திட்டங்களுக்கு டெல்லியிலுள்ள மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நிதி உதவியளிக்கிறது. தற்போது மினார்ஸ் திட்டத்தின் கீழ் தாமிரபரணி, பாலாறு மற்றும் வைகை ஆகிய நதிகள் மற்றும் உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு, வீராணம், போரூர், பூண்டி, பழவேற்காடு, செங்குன்றம் மற்றும் புழல் ஏரிகள் கண்காணிக்கப்படுகின்றன. மேற்கூறிய இரு திட்டங்களின் கீழ் காவிரி ஆறு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

காவிரி ஆறு மற்றும் அதன் கிளைகள்

தமிழ்நாட்டின் பெரிய ஆறுகளில் ஒன்றான காவிரி, மாநிலத்தின் மூன்றில் ஒரு பகுதி நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி அளிக்கிறது. குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளின் செயல்களினால் ஏற்படும் மாசின் பாதிப்பை அறிய காவிரி ஆறு ஒரு முக்கிய ஆறு என்ற அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் நீரின் தன்மை ஜெம்ஸ் திட்டத்தின் கீழ் 4 இடங்களிலும், மினார்ஸ் திட்டத்தின் கீழ் 29 இடங்களிலும் ஆக மொத்தம் 33 இடங்களில் கண்காணிக்கப்படுகிறது. இந்த இடங்கள் தொழிற்சாலைக் கழிவுநீர், வீட்டுக் கழிவுநீர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுநீர் ஆற்றில் சேரும் இடங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கண்காணிப்பு நிலையத்தைப் பொறுத்தவரை பல்வேறு வகைப்பட்ட பௌதீக, இரசாயன மற்றும் நுண்ணுயிரின் தன்மைகள் ஆய்வு செய்யப்படுகின்றன. சேலத்திலுள்ள மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகத்தில் தில்லியில் உள்ள மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நிர்ணயித்துள்ளபடி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

தாமிரபரணி ஆறு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தாமிரபரணி ஆற்றின் நீரின் தன்மையை பரிந்துரைக்கப்பட்ட கால இடைவெளியில் தில்லியில் உள்ள மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நிர்ணயித்துள்ளபடி 12 இடங்களில் கண்காணித்து வருகின்றது. நீர் மாதிரிகளின் பௌதீக, இரசாயன மற்றும் நுண்ணுயிரின் தன்மைகள் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆய்வுகள் திருநெல்வேலியில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

பாலாறு

வாணியம்பாடி நகராட்சி குடிநீர் தலைமை நிலையத்தில் உள்ள ஒரு இடம் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் கண்காணிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகத்தில் நீர்மாதிரிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த கண்காணிப்பு இடத்தில் சேகரிக்கப்படும் நீர் மாதிரிகளின் பௌதீக, இரசாயன மற்றும் நுண்ணுயிரின் தன்மைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

வைகை ஆறு

இத்திட்டத்தின் கீழ் வைகை ஆற்று நீரின் தன்மை திருப்புவனம் என்ற இடத்தில் வைகை ஆற்றில் அமைந்துள்ள நீரோற்று நிலைய கிணற்றிலிருந்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. நீர்மாதிரிகளின் பௌதீக, இரசாயன மற்றும் நுண்ணுயிர் தன்மைகள் மதுரையில் உள்ள மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

ஏரிகள்

இந்திய தேசிய நதிநீர் ஆதாரங்களை கண்காணிக்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 8 முக்கிய ஏரிகளான உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு, வீராணம், போரூர், பூண்டி, பழவேற்காடு மற்றும் செங்குன்றம் ஆகியவை தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாதமும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

தொடர் நீர் தர கண்காணிப்பு நிலையங்கள்

சாயத் தொழிற்சாலைகள் நிறைந்துள்ள திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் நீர் நிலைகளின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்கும் பொருட்டு வாரியம் காளிங்கராயன் வாய்க்கால் மற்றும் நொய்யல் ஆற்றில் தலா மூன்று இடங்களில் தொடர் நீர் தர கண்காணிப்பு கருவிகளை பொருத்தியுள்ளது. இந்நிலையங்களின் மூலம் நீரின் அமில கார சமநிலை, மொத்தம் கரைந்துள்ள திடப் பொருட்கள், கரைந்துள்ள பிராண வாயு அளவு ஆகிய காரணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதே போல தாமிரபரணி ஆற்றிலும் மூன்று இடங்களில் கண்காணிப்பு கருவிகளை வாரியம் பொருத்தியுள்ளது. அக்டோபர் 2014 முதல் இந்நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.