• தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு வரவேற்கிறோம்
  • 044 22353134
  • Font Size: A A A
logo

Tamil Nadu Pollution Control Board
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை

மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016-யை அறிவிக்கை செய்துள்ளது. இவ்விதிகளின் படி, பிளாஸ்டிக் கழிவு என்பது பயன்படுத்தப்பட்டு அல்லது பயன்படுத்தும் நோக்கம் நிறைவேறியவுடன் தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் ஆகும். பிளாஸ்டிக் கழிவுகளை தரம்பிரித்தல், சேகரித்தல், சேமித்தல், கொண்டு செல்லுதல், செயலாக்கம் செய்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகும்.

இவ்விதிகளின்படி, புதிய மற்றும் மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பைகள் 50 மைக்ரான் தடிமனுக்கு கீழ் இருக்கக்கூடாது. பிளாஸ்டிக் பைகள், பல அடுக்குகள் கொண்ட பேக்கேஜிங், பிளாஸ்டிக் சீட் அல்லது அது போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்வோர் மற்றும் இறக்குமதி செய்வோர் மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் பதிவு சான்றிதழ் பெற வேண்டும். இவ்விதிகளின்படி பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பல அடுக்கு பேக்கேஜிங் பிளாஸ்டிக் உற்பத்தி செய்வோர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவோர்களை பதிவு செய்து, கண்காணிப்பது மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பொறுப்பாகும். இதுவரை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 471 பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மற்றும் 140 பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்துள்ளது. இவற்றில் 219 தொழிற்சாலைகளுக்கு வாரியத்தின் பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி விதிகளை திறம்பட செயல்படுத்த வேண்டும் என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளை முறைப்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிளாஸ்டிக்கின் தீமைகள் மற்றும் பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களின் தேவை ஆகியவை பற்றி பொதுமக்களுக்கும் / அரசு நிறுவனங்கட்கும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கும் மையங்களை ஏற்படுத்த, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொடர்ந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சென்னை, மதுரை மாநகராட்சிகள் மற்றும் திண்டுக்கல் நகராட்சிகளில் பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கும் மையங்கள் உள்ளன. இவற்றில் கழிவுகளைத் துண்டாக்கும் உபகரணங்கள் உள்ளன. இம்மையங்களில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மாநகராட்சிகளில் சாலைகள் போடப் பயன்படுத்தப்படுகின்றன. இச்சாலைகளை மாநகராட்சியும், உள்ளாட்சி அமைப்பும் பராமரிக்கின்றன.