• தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு வரவேற்கிறோம்
  • 044 22353134
  • Font Size: A A A
logo

Tamil Nadu Pollution Control Board
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பொது மக்கள் பங்கேற்பு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பொது மக்கள் பங்கேற்பு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் நோக்கமானது சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பொது மக்களிடம் ஏற்படுத்தி அவர்கள் பங்களிப்புடன், வளமான சுற்றுச்சூழலை எதிர்கால சந்ததியர்களுக்கு விட்டுச் செல்வதாகும். மேலும், பல்வேறு மாசு கட்டுப்பாடு அளவீடுகளை, செம்மையான முறையில் அடைய, சுற்றுச்சூழல் பிரச்சாரம் ஒரு சிறந்த கருவியாக உள்ளது. வாழ்வதற்கான சிறந்த சூழல் என்ற முக்கிய இலக்கினை அடைய, அரசு இயந்திரம், சுற்றுச்சூழலுக்கு உகந்த விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு வகையான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அதன்படி 2015-2016 –ஆண்டில் கீழ்கண்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை:- நீர் நிலைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் விநாயகர் சிலைகளை பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மற்றும் பெயிண்ட்டுகளை பயன்படுத்தி செய்ய வேண்டாம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும், நகரங்களிலும் நடத்தப்பட்டது. மேலும், சிலைகள் கரைக்கப்படுவதற்கு முன்பும் பின்பும், கண்டறியப்பட்ட நீர் நிலைகளின், நீரின் தரம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினால் கண்காணிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகை:- பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு மற்றும் ஒலி மாசு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக நவம்பர் 2015 தீபாவளி பண்டிகையின் போது வாரியம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி சுற்றுப்புற காற்று மற்றும் ஒலி அளவினை கண்காணிப்பு செய்தது. 125 டெசிபெல் என்ற ஒலி அளவுக்கு மேல் ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டது. மேலும், சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, வேலூர், சேலம், ஓசூர், திருப்பூர், திண்டுக்கல், மற்றும் கடலூர் ஆகிய நகரங்களில் சுற்றுப்புற காற்றுத்தரம் மற்றும் ஒலி அளவினை, கண்காணித்து அதன் முடிவுகள் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

போகி பண்டிகை:- டயர்கள், டியூபுகள், நெகிழி பொருட்கள், துணிகள் போன்ற வீணான பொருட்களை எரிக்கவேண்டாம் என விழிப்புணர்வு பிரச்சாரங்கள் வாரியத்தால் ஜனவரி 2016 போகி பண்டிகை அன்று நடத்தப்பட்டது. மேலும் சென்னை மாநகரில், 15 இடங்களில், போகி பண்டிகைக்கு முந்தய நாட்களிலும், போகி பண்டிகை நாளிலும், சுற்றுப்புற காற்று தரத்தினை கண்காணித்தது.

கார்த்திகை மகா தீபத்திருவிழா:- திருவண்ணாமலையில் நடைப்பெற்ற கார்த்திகை மகா தீபத்திருவிழாவின் போது பிளாஸ்டிக் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் வாரியத்தின் மூலம் நடத்தப்பட்டது. பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து அதற்குமாற்றான துணிப்பை, காகிதப் பை, சணல் பை போன்றவற்றை பயன்படுத்த ஊக்குவிக்கும் வண்ணம் கார்த்திகை மகா தீபத்திருவிழாவிற்கு துணிப்பை மற்றும் சணல்பையுடன் வரும் பொது மக்களுக்கு கூப்பன் வழங்கி, இறுதியில் குலுக்கல் மூலம் தேர்வு செய்து தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி பொது மக்களிடையே பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

மகாமகம் திருவிழா:- கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமகம் திருவிழாவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பெரிய அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. 07.01.2016 அன்று "மாசில்லா மகாமகம்" என்ற பொருளை முன்வைத்து கும்பகோணத்தில் ஒரு பெரிய பேரணியை நடத்தியது. இதில் 1000 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். 22.01.2016 அன்று "தூய்மை கும்பகோணம்" என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். 02.02.2016 அன்று பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் 1000 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்குபெற்றனர். 03.02.2016 அன்று "தூய்மை கும்பகோணம்"என்ற பொருளை முன் வைத்து 1500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்புடன் மனித சங்கிலி நடத்தப்பட்டது. மேலும் மகாமகம் திருவிழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு பொருட்காட்சியில் வாரியம் பங்குபெற்றது.

அரசு பொருட்காட்சிகள்:- வாரியம், சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் அரசு பொருட்காட்சியிலும் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படும் அரசு பொருட்காட்சிகளிலும் சிறப்பாக பங்கேற்று வருகின்றது. இப்பொருட்காட்சிகளில் வாரியம் அரங்கம் அமைத்து கழிவுநீர்சுத்திகரிப்பு நிலையம், காற்று மாசுகட்டுப்பாடு சாதனங்கள், திடக்கழிவு மேலாண்மை பற்றிய மாதிரி வடிவமைப்புகள், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்மந்தமான தகவல்களை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கிறது. 2015-2016 ஆம் ஆண்டில் வாரியம் சென்னை தீவுத்திடல், திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அரசு பொருட்காட்சிகளில் பங்குபெற்றது. இதில் அமைக்கப்பட்டிருந்த வாரிய அரங்கினை அதிக அளவில் மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு பயனடைந்தனர். தேனி மாவட்டத்தில் வைகை பெருவிழா என்ற திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற பொருட்காட்சியில் வாரியம் அரங்கம் அமைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்மந்தமான தகவல்களை பொது மக்களிடம் எடுத்துச்சென்றது.

ஈரோட்டில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சுற்றுச்சூழல் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மாநில அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோட்டில் 16.10.2015 மற்றும் 17.10.2015 ஆகிய நாட்களில் வாரியத்தால் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு அரசு துறை அலுவலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசுசாரா அமைப்புகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெற்றனர். 16.10.2015 அன்று பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டது. 16.10.2015 மற்றும் 17.10.2015 ஆகிய நாட்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்மந்தமான கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் அரசு துறைகள், அரசுசாரா அமைப்புகள் மற்றும் பல்வேறு தொழிற்சாலை சங்கங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கக்கூடிய மாதிரி வடிவமைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தார்கள். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.